நோக்கம்
ஒரு குழந்தை முதன்முதலில் எழுதக் கற்றபோது, இந்த மண் அதன் கையில் கொடுத்த வரி: அறம் செய்ய விரும்பு. எழுத்துக்கு முன் ஒழுக்கம்; பாடத்துக்கு முன் விருப்பம்.
கல்வி என்றால் என்ன என்பதற்கு, இதைவிடத் தெளிவான வரையறை இன்னும் எழுதப்படவில்லை.
பண்பு பாடமாகச் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை; பார்த்துக் கற்கப்படுகிறது. குழந்தையின் முதல் ஆசிரியர் வீடு; முதல் பாடநூல் அன்றாட வாழ்க்கை. இது எல்லோருக்கும் தெரியும்.
தெரிவதற்கும் வாழ்வதற்கும் இடையே ஒரு தூரம் இருக்கிறது — அதைக் கடக்கத்தான் துணை வேண்டும்.
தன்னை அறிந்தவரிடம் — அமைதி.அமைதி இருக்கும் இடத்தில் — அன்பு.அன்பு இருக்கும் வீட்டில் — நல்ல மனிதர்கள்.
மனிதர்கள் தங்களை அறிந்துகொள்ள, வளர்ந்துகொள்ள — அந்தத் துணையாக நிற்பதே எங்கள் வேலை. அமைதியாக, நிதானமாக, நெடுங்காலமாக.
இனி வரும் தமிழகத்தை யாரோ ஒருவர் கட்டப்போவதில்லை. வீடு வீடாக, அவரவர் அளவில், நல்லதை விரும்புகிறவர்கள் கட்டுவார்கள். அந்த வீடுகளில் குரல்கள் தணிவாக இருக்கும்; கேள்விகள் வரவேற்கப்படும்; தவறுகள் பாடங்களாகும். எங்கள் பங்கு, அந்தக் கைகளுக்குத் தேவையான கருவிகளை வழங்குவது மட்டுமே.
ஆண்டுகள் செல்லச் செல்ல, அறம் என்ற சொல் ஒரு நிறுவனத்தை அல்ல — உங்கள் வீட்டில் வளர்ந்த நல்ல மனிதர்களை நினைவூட்ட வேண்டும்.
எங்கள் வேலை அதுவரை.
நல்ல குழந்தை.நல்ல குடும்பம்.நல்ல தமிழகம்.